Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சமூக நல்லிணக்கத்திற்கான திறவுகோலில் மொழியால் இணைந்த கற்கை நெறியின் பயணம்!

 



"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதற்கிணங்க அனைத்து ஊரும், அனைத்து மக்களும் நமது மக்களே என்ற எண்ணத்தை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். அதுபோலவே ஒரு நாட்டின் வளர்ச்சி அங்கு வாழும் நாட்டு மக்களிடத்திலே உள்ளது. அதுவே சமூக நல்லிணக்கம் ஆகும். பல்லின சமூகத்தில் வாழுகின்ற ஒரு மனிதன் சமூகத்தோடு முரண்பாடுகள் இன்றி  இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழப் பழகிக் கொள்ளும் ஒரு நிலையே சமூக நல்லிணக்கம் ஆகும். சர்வதேச மட்டத்திலும், நாடளாவிய ரீதியிலும் பேசப்படும் ஒரு பேசும் பதம் "சமூக நல்லிணக்கமே"!  இலங்கை நாட்டின் சமுதாயத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு பேரிடராக இருப்பது இன, மத, மொழி, சமய ரீதியாக ஒவ்வொரு சமூகமும் தம்மை பிளவுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றமையேயாகும். இவ்வாறான ஒரு நிலைமையில் சமூக நல்லிணக்கத்தை பற்றிய அறிவை சமூகத்தின் மத்தியில் பரப்பும் அடிப்படையில் அரசும், பல அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என பல்வேறுபட்ட அமைப்புகளும் பாடுபட்டு, முயற்சித்து வருகின்றன. 


அந்த வகையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள எழுத்தாணி கலைப் பேரவையானது தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மொழியில் அமைந்த ஒரு கற்கை நெறியினை முன்னெடுத்து  வருகின்றது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் எழுத்தாணி கலைப் பேரவையானது  கலை, இலக்கிய, சமூக சார்  செயற்பாடுகளை மிகவும் காத்திரமான முறையில் முன்னெடுத்து செயற்பட்டு வருகின்றமை இவ்விடத்தில் பதிவு செய்யக்கூடிய விடயமாகும். இவ்வாறான முன்மாதிரியான செயற்பாடு கொண்ட எழுத்தாணி கலைப் பேரவை மூலமாக முன்னெடுத்து வரும் இக் கற்கை நெறியை முற்றிலும் இலவசமாகவே எமக்களித்துள்ளது. இக் கற்கை நெறிக்கு பலரும் விண்ணப்பித்து இருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கொண்டே இவ்  கற்கை நெறியினை நடாத்தி வருகின்றது. இக் கற்கை  நெறியானது ஆரம்பகட்ட வகுப்புகளில்  தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்கும், சகோதர மொழி பேசும் ஊடகவியலாள்களுக்கும் தனித்தனி வகுப்புகளாக நடைபெற்றாலும், இரண்டாம் கட்டத்தில் பயிற்சியின் மூலமாக நாம் இணைக்கப்பட்டோம். ஆரம்பகட்ட வகுப்புகளில் எமக்கு தெரிந்த சிங்கள மொழியின் அடிப்படையைக் கொண்டே நகர்ந்து சென்றோம். அதிலும் ஒரு சிலர் சிங்கள மொழியை எழுத மட்டுமே தெரியும் கதைக்கத் தெரியாது. வேறு சிலர் கதைக்க மட்டுமே தெரியும் எழுதத் தெரியாது. மற்றைய சிலர் கதைப்பதிலும் எழுதுவதிலும் ஓரளவு தெரிந்தவர்களும், ஓரளவு குறைவாக தெரிந்த நிலையிலுமே இருந்தோம். ஆயினும் நமக்கான நிலையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வளவாளர்களாக வந்தவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அறிவு ஆற்றல் மிகச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு  கதை சொல்லல், ஆடல், பாடல்கள் என சுவாரஸ்யமான முறையில் கற்கை நெறியினை கொண்டு சென்றமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். இதன் வாயிலாக பயத்திலும், ஒருவித கூச்சத்திலும் இருந்த நாம் அதன்பின் எம்மை பலப்படுத்தி வகுப்புகளில் எமக்கான ஒளியை வீசத் தொடங்கினோம். எம் கற்கை நெறியானது வெறுமனே வாய்மொழியிலும், எழுத்து மொழியிலும் ஆன பயிற்சியுடன் மட்டும் தொடரவில்லை. அதன் இரண்டாவது கட்டத்தில் தமிழ், சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்கள் இணைந்த ஒரு பயிற்சியாகவே அடுத்தகட்ட பாதைக்கு நகர்த்தப்பட்டது. அதில்  முதல் அம்சமாக தமிழ்,சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த சமூக ஒன்று கூடலுக்கான களத்தில் இல்லத்தை நோக்கிய ஒரு பயணம். அதாவது தமிழ், சிங்கள மொழி பேசுபவர்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும், வாழ்க்கை கோலங்களையும் அறியும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட பயணமாகும். இதில் தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர் ஒருவர் சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளரின்  இல்லத்திற்கும், சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர் தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளரின் இல்லத்திற்குமான பயணமாகும். எழுத்தாணி கலை பேரவையின் ஒழுங்கமைப்பில், அவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொதிகளுடன், அவரவருக்கான குறித்த நபரின் இல்லத்துக்கு சென்றிருந்தோம். அவ்வாறாக சகோதர மொழி பேசும் ஒரு சகோதரியின் இல்லத்திற்கு  நான் சென்றிருந்த போது, அவர்களின் குடும்பத்தினர் இன்முகத்துடன் வரவேற்றனர். அச் சகோதரி மூலமாக அவர்களின் வாழ்க்கைக் கோல முறையை அறிந்தது மட்டுமல்லாமல் அவர்களின் உணவு பழக்க வழக்கங்களையும், விருந்தோம்பலையும் கண்டு பூரிப்படைந்திருந்தேன். அவருடைய குடும்பத்தாருடன் ஓரளவுக்கு எனக்கு தெரிந்த அளவில் கதைத்த போது அவர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி என்னிடம் சகஜமான, தோழமையுடன் அலவலாடினர். அத்துடன் அவர்களின் பண்பாட்டு, கலாசார விடயங்களையும், வழிபாட்டு முறைகளையும் நான் அறிந்து கொண்டேன். இல்லத்தை நோக்கிய பயணத்தின் மூலமாக நான் சகோதர மொழி பேசும் மக்களின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை கோலங்களை அறிந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இடையிலான ஒரு புரிந்துணர்வை பெற்றுக்கொண்டதோடு அதன் மூலமாக சமத்துவ மனப்பாங்கை நம்மிடத்தில் வளர்த்துக் கொள்ள பேருதவியாக இருந்தமையோடு இனம், மதம், மொழி என்பவற்றைக் கடந்து நாம் எல்லோரும் "இலங்கை நாட்டு மக்களே"" என்ற ஒரு திட சங்கற்பத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்த பயணமாகவே இதனை நான் கருதுகின்றேன்.



இவ்வாறாக கடந்து சென்ற எமது கற்கை நெறியின் அடுத்த கட்டமாக எம் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கண்டி மாவட்டத்தை நோக்கிய வெளிக்கள சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தோம். அதிகாலையில் ஆதவன் தன் பொற்கரங்களை பரப்பும் வேளையில், உந்துருளியில் எமது பயணத்தை ஆரம்பித்தோம். போகும் வழியில் இதமான தென்றல் வீச நாம் எல்லோரும் தமிழ், சிங்களப் பாடல்களைக் கேட்டுக் கொண்டு, நடனமாடி ஒருவருக்கு ஒருவர் சந்தோஷமாக "ஒரு தாய் பிள்ளைகள்" போல, எழுத்தாணி அமைப்பு குழுவினருடன் சென்று கண்டியை அடைந்தோம். அதில் ஒரு சிறப்பான அம்சமாக மலையகத்தைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க ஊடகவியலாளர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பை எமது எழுத்தாணி கலை அமைப்பு ஒழுங்குப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் இதன் மூலமாக அவர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் அனுபவப் பதிவுகளையும், அவர்கள் கடந்து வந்த பாதையில் மொழியிலான தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். இத்தருணத்தில் எமது ஆற்றுகை திறன்களையும் அரங்கேற்றினோம்.  தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வாறாக அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்று மாத்தளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனையும் தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருந்தது. சகோதர மொழி பேசும் என் சக தோழமையுடன் இணைந்த இவ் வெளிக்கள சுற்றுப்பயணத்தில் இன நல்லிணக்கத்திற்கான பாதையாக நகர்த்திச் சென்றோம். பயணமும் இனிதே நிறைவு பெற்றது. 



தமிழ், சிங்கள மொழிகளின் ஊடுறுவல் ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றது என்பதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமின்மையையும்  மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். இதன் மூலம் தமிழ் மொழியினதும், சிங்கள மொழியினதும் அவசியத்தை கற்றுக் கொள்ள முடிந்தது. இவ்வாறாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள எமது கற்கை நெறியின் மூலமாக நாம் சகோதர மொழி பேசும் ஊடகவியலாளர்களிடம் ஒன்றிணைந்ததோடு பரஸ்பர ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்துக் கொள்வதற்கான களத்தை அமைத்து தந்த பெருமை எழுத்தாணி கலைப் பேரவைக்கே! 


சமூக நல்லிணக்கம் சார்ந்த விடயங்களை முன்னெடுத்துச் செல்வதில் பல நிறுவனங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இக்காலகட்டத்தில் இவ்வாறானதொரு கற்கை நெறி மூலமாக அதனை முன்னெடுத்துச் சென்ற எழுத்தாணி கலைப் பேரவைக்கும், விருத்தி அமைப்புக்கும் இவ்விடத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 


சமூக நல்லிணக்கத்திற்கான திறவுகோலில் மொழியால் இணைந்த எம் கற்கை நெறியின்சமூக நல்லிணக்கத்திற்கான திறவுகோலில் மொழியால் இணைந்த எம் கற்கை நெறியின் பயணத்தின் மூலமாக இலங்கை நாட்டில் தமிழ், சிங்கள இரு மொழிகளையும் சமநோக்கில் கற்றுத் தேர்ச்சியடைந்தால், நாட்டின் மொழி முரண்பாட்டை நீக்க முடியும். இதன் மூலமாக சமத்துவமிக்க சமூகத்தை உருவாக்குவதோடு ஒற்றுமையை வலு பெறச் செய்து சுபீட்சமான, ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலத்துடன் கூடியதொரு சமூகத்தை அடையலாம் என்பது எனது அனுபவத்தின் வாயிலாக கண்ட உண்மையான விடயமாகும்.

" யாதும் ஊரே யாவரும் கேளிர்" 

நன்றி!

 *"ராமபக்தன்"*

(புவனேந்திரன் திவாகரன்* திருகோணமலை)



No comments