Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலுக்கு சாகித்திய(2023) விருது விழாவில் சான்றிதழ் பரிசு

 


கொழும்பு மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில்  (04-09-2023) நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் வைத்தியர் த.ஜீவராஜ் எழுதிய தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலுக்கு சுய நானாவிதம் பிரிவில் சான்றிதழ் பரிசு  வழங்கப்பட்டது.

1991 முதல் வீரகேசரி, மித்திரன் வாரமலர், தினமுரசு, சங்குநாதம், இளவரசி, நாடி, மலைமுரசு, கலைக்கேசரி, தாய்வீடு (கனடா) மற்றும் சிறப்பிதழ்களில் தனது ஆக்கங்களை கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்களில் எழுதிவரும் வைத்தியர் த.ஜீவராஜ் 13.08.2008 முதல் ஜீவநதி வலைப்பதிவினூடாக இணையவெளியில் செயற்பட்டு வருகிறார்.


 கல்வெட்டுக்களைத் தேடி அலைவதிலும், ஓலைச்சுவடி முதலான ஆவணங்களைச் சேகரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டு இயங்கிவரும் இவரது முதலாவது நூலான கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  இவரது இரண்டாவது நூலான தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு ஊர்ப்பெயரின் பின்னால் அதன் வரலாற்றைத் தேடி அவர் பயணித்த அனுபவங்களை இலக்கியம் ,  கல்வெட்டுக்கள்,  செப்பேடுகள்,  ஆவணங்கள் என்பனவற்றின் துணையோடு சுவைபட பதிவு செய்திருக்கிறது. இவை தவிர திருகோணமலைத் தமிழ் கல்வெட்டுக்கள்(வரலாறு), திருகோணமலையில் சோழர்(வரலாறு), திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேச்சரம் (ஆய்வு), மனம் துடிக்கும் (கவிதைத் தொகுப்பு) ஆகிய மின்நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.



 

தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய நூலாசிரியர் அவரது உயர்தரக் கல்வியை திருகோணமலை ஸ்ரீ இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நிறைவு செய்தார். யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தில் கல்வி கற்று MBBS வைத்தியராக தனது பணியினை திருகோணமலையில் மேற்கொண்ட இவர் The College of General Practitioners of Sri Lanka (CGPSL) இன் MCGP Diploma இனை 2016 இல் நிறைவு செய்திருந்தார். தற்பொழுது The Master of Science Degree Programme in Biomedical Informatics பட்டமேற்படிப்பிற்குத் தெரிவாகி Postgraduate Institute of Medicine (PGIM) Colombo இல் தனது கல்வியைத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



நூல்              -  தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு

வெளியீடு         -  திருமதி ஜீவரத்தினம் தங்கராசா

                        சின்னவர்ணமேடு

                          தம்பலகாமம்

பக்கங்கள்         - 301

அச்சுப்பதிப்பு       - ஸ்ரீராம் பதிப்பகம்

                        திருகோணமலை

கிடைக்கும் இடம் - பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு.

இணையத்தில் நூலகத் திட்டத்தில் இலவசமாகத் தரவிறக்கி வாசிக்கலாம்.





No comments