Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

மூடப்படும் நிலையில் அரச பாடசாலை!

 


திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


இந்தப் பாடசாலை அனுராதபுரம்-திருகோணமலை ஆகிய மாவட்டத்தின்  எல்லையாக  காணப்படும் ரொட்டவெவ கிராமத்தில் அமைந்துள்ளது.

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுவதுடன் அதில் மிக முக்கியமான பாடசாலை இந்த பாடசாலை ஆகும்.

இப்பாடசாலை க.பொ.த உயர் தரம் வரை தரம் உயர்த்தப்பட்டிருக்கின்ற நிலையில் 20 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 13 ஆசிரியர்களே கடமையாற்றி வருகின்றனர்.

இதில் இரண்டு ஆசிரியர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன் மற்றுமொரு பெண் ஆசிரியர் ஆசிரியர் கலாசாலைக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் தற்போது கடமைக்கு உள்ள 13 ஆசிரியர்களில் நான்கு ஆசிரியர்கள் உட்பட தற்போதைய அதிபர் இடமாற்றம் பெற்று செல்வதற்கு விண்ணப்பித்துள்ளதுடன் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு முயற்சி செய்து வருவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே நேரம் 240 மாணவர்கள் கல்வி பயின்று வந்த நிலையில் வேறு பாடசாலைகளுக்கு பெற்றோர்கள்  தமது மாணவர்களின் விலகல் கடிதங்களைப் பெற்று வேறு பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

விவசாயம், மீன் பிடி மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை போன்றவற்றை நம்பி வாழ்ந்து வரும் இம்மக்களின் பிள்ளைகளின் கல்வி நிலை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

 அதேநேரம் பாடசாலையின் முகப்பு தோற்றம், பாடசாலையின் வளாகம், பாடசாலையின் விளையாட்டு மைதானம் போன்றவற்றின் நிலை பார்ப்பதற்கும் மிகவும் மோசமாக காணப்படுகின்ற நிலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இருந்த போதிலும் பாடசாலையின் குறைபாடுகள் குறித்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களை தெளிவு படுத்தாமல் தாங்கள் இருக்கும் வரை இருந்து விட்டுச் செல்வோம் என்ற நோக்கில் செய்யப்பட்டு வருவதாகவும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தான் ஒரு அரச ஊழியராக இருந்த போதும் பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி சங்கம் காணப்பட்ட போதும் பாடசாலையின் அதிபருக்கு ஏற்ற விதத்தில் நிர்வாகத்தை தெரிவு செய்து வருவதாகவும், பழைய மாணவர்களுக்கு கூட பாடசாலையின் குறைபாடுகள் குறித்து தெரியப் படுத்துவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களை, கலாச்சார விழுமியங்களை, மாணவர்களின் ஒழுக்க விதிமுறைகளை ஒரு நாள் கூட பெற்றோர்களுடனோ அல்லது பழைய மாணவர்களுடனோ அதிபர், ஆசிரியர்கள் பேசுவதில்லை எனவும் பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி தெரிவித்தார்.

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்ற போதிலும் அப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிக அளவில் காணப்படுகின்றது. 

பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் குறித்து வலய கல்வி பணிமனைக்கு தெரியப்படுத்துவதற்கு பெற்றோர்களுக்கோ அல்லது பழைய மாணவர்களுக்கோ பாடசாலை அதிபரால் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை எனவும் மற்றுமொரு பழைய மாணவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயம் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கூட அப்பாடசாலையின் குறைபாடுகள் இன்னும் நிவர்த்திக்கப்படவில்லை.

திருகோணமலை வடக்கு கல்வி வலயம் இந்தப் பாடசாலை விடயத்தில் கவனயீனமாக செயல்படுவதையும், பெற்றோர்களையும், மாணவர்களையும்  ஏமாற்றி கல்வி மேம்பாட்டிற்காக எவ்வித உதவியையும் செய்யாமல் அலட்சியமாக இருப்பதையும்  அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஆகவே கிழக்கு மாகாணம் கல்வி மட்டத்தில் ஒன்பதாவது இடத்தில் இருந்த போதிலும் இனிவரும் காலங்களிலாவது  வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாணவர்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், திருகோணமலை வடக்கு கல்வி நிலைய பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள இந்த பாடசாலையின் அபிவிருத்திக்காக செயல்பட வேண்டும் எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)










No comments