உயிரோடு இருக்கும் குரங்குகளின் மூளையை உண்பதற்காகவே அரசாங்கம் 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக தங்களால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான நயனக்க ரன்வெல்ல, ஊடக சந்திப்பொன்றின் போது டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
”இலங்கையின் வனஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து பணமீட்டும் நோக்கத்துடன் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.
விலங்குகளை ஏற்றுமதி செய்வது அந்நிய செலாவணியைப் பெற உதவாது. இந்த செயற்பாடுகளின் பின் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை உயர் அதிகாரி ஒருவரின் மனைவி இருக்கின்றார்” என ரன்வெல்ல தெரிவித்தார்.
“குரங்குகளின் மூளையை சமைக்காமல் பச்சையாக உண்ணும் விசேட உணவுத் தயாரிப்பு முறைமையொன்று சீனாவில் முன்னெடுக்கபட்டு வருகின்றது. அத்துடன் அமெரிக்காவிலிருந்தும் பெருமளவு எண்ணிக்கையிலான குரங்குகளை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தக் குரங்குகளின் உடல் கட்டமைப்பு மனிதர்களை ஒத்ததாகும். எனவே அவை இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் உபயோகிக்கப் படலாம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
“குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக நாட்டை சீர்குலைத்த பாராளுமன்ற அங்கத்தவர்களை ஏற்றுமதி செய்யுங்கள்“ என ரன்வெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குரங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு குரங்கு ஏற்றுமதி தீர்வல்ல. பயிர்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே நாம் சமர்ப்பித்துள்ளோம்.
ஆனால் அரசாங்கத்திலுள்ள யாரும் அதைக் கவனிக்கத் தயாராக இல்லை என ரன்வெல்ல தெரிவித்தார்.
No comments