Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிண்ணியாவில் காரணம் கூற முடியாத முடக்கம்-நகரசபை உறுப்பினர் கோரிக்கை

 


கிண்ணியாவில் காரணம் கூற முடியாத தொடர் முடக்கத்தால் பொதுமக்கள் மன அழுத்தங்குள்ளாகி அரசின் மீது அதிருப்தி கொண்டு வருகின்றனர். எனவே, இதனை உடன்  நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஹால் ஏ சத்தார் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கிண்ணியா பிரதேச செயலாளருக்கு இன்று (04) கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிண்ணியா நகரசபைப் பகுதியின் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கொரோனா தொற்றுதலைக் காரணம் காட்டி தங்களது உத்தியோகபூர்வ அறிவிப்பு மூலம் கடந்த மே மாதம் 14ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளன. 

எனினும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை, மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பன முடக்கப்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை நோக்கும் போது இந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஏன் முடக்கப்பட்டன என்று காரணம் கூற முடியாத நிலை உருவாகியுள்ளது. 

இது ஒருபுறமிருக்க நாட்டில் இவ்வாறு முடக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தொற்றுக் குறைந்தமை காரணமாக 8 தினங்கள் மற்றும் 14 தினங்களில் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

எனினும், கிண்ணியா நகர சபைப் பகுதியில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டு இன்றுடன் 22 தினங்கள் நிறைவு பெற்றுள்ளன. இவற்றில் தொற்று மிகவும் குறைந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கூட இதுவரை விடுவிக்கப்பட வில்லை. இதற்கான காரணம் கூட பொதுமக்களுக்கு தெளிவு படுத்தப்படவில்லை. 

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர் போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை விட அதிக தொற்றாளர்கள் தற்போது இருந்தும் அங்கு எந்தவொரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் முடக்கத்தில் இல்லை.

எனவே, கிண்ணியா நகரசபைப் பகுதியில் மட்டும் நியாயமான காரணம் கூறப்படாத நிலையில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொடர்ந்து முடக்கத்தில் உள்ளன. 

சில அதிகாரிகளின் இந்த செயற்பாடு காரணமாக தாங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற மனோநிலை கிண்ணியா நகரசபைப் பகுதி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தங்குள்ளாகி அவர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடையும் நிலை உருவாகியுள்ளது. 

ஒரு சில அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடு காரணமாக பொதுமக்கள் அரசின் மீது அதிருப்தி அடைவதை அனுமதிக்க முடியாது.

ஆகவே, தாங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்த அதிகாரி என்ற வகையிலும், கிண்ணியா ஒருங்கிணைப்புக்குழுவுக்கு பொறுப்பான அதிகாரி என்ற வகையிலும் இந்த விடயத்தை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
 
எனவே, இந்த விடயத்தினை உடன் உரிய மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து காரணம் கூறப்பட முடியாத தொடர் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இக்கடிதத்தின் பிரதிகள் திருகோணமலை அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளன.

No comments