(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த கிராமத்தில் நாட்டில் அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் தாங்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும் தங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த யுத்த காலத்தின்போது கந்தளாய்,முள்ளிப்பொத்தானை பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும் தற்போது நாமல்வத்த கிராமத்துக்கு வருகை தந்து பல வருடங்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் தாங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கூலித்தொழில் செய்து வருகின்ற நிலையில் தங்களுக்கு வீடுகளை கட்டுவதற்கு வசதிகள் இல்லை எனவும் அரசியல்வாதிகளின் பின்னால் சென்றவர்களுக்கு மாத்திரம் வீடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் தங்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டத்தினை வழங்க வேண்டும் எனவும் நாமல்வத்த பிரதேசத்தில் குடிசையில் வாழ்ந்துவரும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை கூலித் தொழில் செய்து வருகின்ற தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும்,தனது தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய பிள்ளைகள் எட்டு பேர் தன்னுடன் இருப்பதாகவும், தாயார் வீடு வீடாகச்சென்று கூலி வேலை செய்து வருவதாகவும் குடிசை வீட்டில் அனைவரும் வாழ்ந்து வருவதாகவும் அல்லது கவலையை வெளிப்படுத்தினார்.
அத்துடன் அனைவரும் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் இரவு நேரத்தில் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாமையினால் வீட்டுக்கு முன்னே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
மேலும் மற்றும் ஒரு குடும்பம் இவ்வாறு தங்களது கவலையை வெளிப்படுத்தினர்-
சுனாமியின்போது தந்தையை இழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனது தாய் தந்தையருடன் குடிசையில் வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு அரசாங்கத்தினால் எதுவித வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
No comments