திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் கூரை விழும் அபாயத்தில் காணப்படுவதாக மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட அனுராதபுர எல்லைக் கிராமமான இக்கிராமத்தில் மீன்பிடி, சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் பெற்றோர்களின் பிள்ளைகள் இப்பாடசாலையில் அதிகளவில் கல்வி பயின்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
முதலாம் ஆண்டு தொடக்கம் பதினோராம் ஆண்டு வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதிலும் போதியளவு இடவசதி இல்லை எனவும் இடவசதி இல்லாமையினால் பெற்றோர்களின் உதவியுடன் குடிசை ஒன்றினை அமைத்து அதில் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் கற்றலுக்கான இடவசதி, ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதி எதுவும் இல்லை எனவும் இது விடயமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கும், திருகோணமலை வடக்கு கல்வி வலய பணிப்பாளருக்கு பல தடவைகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை பழமைவாய்ந்த கட்டிடத்தில் இரண்டு வகுப்புகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், அக்கட்டிடத்தின் கூரை எந்த நேரத்தில் விழும் என்ற அச்சம் நிலவி வருவதாகவும் பெற்றோர்களும் மாணவர்களும் குறிப்பிடுகின்றனர்.
இருந்த போதிலும் பாடசாலைகள் குறைகள் குறித்து பெற்றோர்கள் தங்களுடைய எதிர்ப்பினை வெளிகாட்ட முற்பட்ட போதிலும் அப்பாடசாலையின் நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம் அதிக மாணவர்களை கொண்ட பாடசாலையாகும்.
ஆனாலும் 17 ஆசிரியர்கள் தேவைப் படுகின்ற போதிலும் 12 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த ஐந்து வருடங்களாக இப்பாடசாலையில் சித்திர பாடத்திற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வில்லை எனவும் குறிப்பிடத்தக்கது.
No comments