Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலையில் ஆரம்ப வகுப்புகள் நடாத்துவதை நிறுத்தவும். சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் எச்சரிக்கை!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலையில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அறிவுறுத்தலுக்கு  முரணாக ஆரம்பப் பிரிவு மாணவர்கள்  அழைக்கப்பட்டு வகுப்புகள் நடாத்துவதை உடன் நிறுத்துமாறு திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் பாடசாலை அதிபர்களுக்கு இதனை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது-

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுவரும் கொரோனா தொற்றினைத்  தொடர்ந்து சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவானது மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது நாங்கள் அறிந்ததே. 

எவ்வாறாயினும் எமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி அமைச்சு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு முரணாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு வகுப்புகள் நடாத்தப்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. 

நோய்த்தொற்று ஆய்வுகளின் போது சில கல்லூரிகளில் ஆசிரியர்கள் நோய்த்தொற்று அபாயத்துக்கு உள்ளானவர்களாக இணம் காணப்பட்டுள்ளமையும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

எனவே தயவு செய்து கல்வியமைச்சு மற்றும் சுகாதாரம் அமைச்சுக்களின் அறிவுறுத்தலுக்கு முரணாக ஆரம்ப பிரிவு மாணவர்கள் அழைக்கப்பட்டு வகுப்புகள் நடாத்துவதை உடன் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 அத்துடன் இவ்வறிவுறுத்தல்களை மீறுகின்ற  பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத் தருகின்றேன் எனவும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் அனுப்பி வைத்துள்ள  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments