Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கரடியன்குளம் பிரதேச மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையுமும்


(அகல்யா டேவிட்-கிழக்குப் பல்கலைக்கழகம்-திருகோணமலை வளாகம்)



ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான குணப்பண்புகளுடன் தனது நிலையிருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், தனித்து ஒரு மனிதனால் தனது அனைத்து தேவைகளையும்,வாய்ப்புக்ககளையும் பெற்றுக்கொள்வது கடினமான ஒரு விடயமாகவே இருக்கின்றது.

அதற்காக அவர்கள் ஏதோ ஒரு குழுவாகவோ, சமூகமாகவோ ஒருங்கிணைந்து வாழவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. சில பகுதியினர் தனக்குள்ள குணாதிசயங்கள், பண்புகள், தேவைகள், அடையாளங்கள் என்பவற்றுடன் ஒத்த குழுக்களாகவும், இன்னும் ஒரு பகுதியினர் பரம்பரை அடிப்படையிலும் குழுக்களாக இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எமக்குத் தெரிந்தது நாம் வாழ்கின்ற சமூகம் பற்றி மட்டும் தான். ஆனால் எமது நாட்டிலேயே எமக்குத் தெரியாத பல சமூகங்கள் தமது தனிப்பட்ட கலை, கலாசாரப் பண்புகளுடனும், அடையாளங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.அவற்றுள் நான் சென்று பழகி இரசித்த ஒரு சமூகக் குழுவைப் பற்றி பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.



மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட, கரடியனாறு கிராமசேவகர் பிரிவிலுள்ள ஒரு சிறு கிராமமே கரடியன்குளம் ஆகும். குசலானமலை எனும் மலையோரப் பகுதியனூடாகச் செல்லும் போது அம்மலையை அண்டி வாழும் இப்பிரதேச மக்களைக் காணலாம். நாற்பத்தொன்பது(49) குடும்பங்களோடு வாழும் கரடியன்குளம் மக்களின் வாழ்க்கைமுறையும் தனித்துவமானது.


ஆதிகாலத்திலிருந்து குசலானமலையை அண்டி வாழும் இம்மக்கள் வேடுவர் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவர். கரடியன்குளம் மக்களின் வாழ்க்கை முறையை நோக்குமிடத்தில், இவர்கள் வேடுவர் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் இவர்களுடைய ஆடை, அணிகலன்கள் உட்பட வாழ்க்கை முறை மற்றும் தொழில் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்பொழுது கழுவங்கேணி, கரவெட்டி போன்ற மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் அவர்களுடைய திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டதன் அடிப்படையில் ஏனைய சமூகத்தவரோடு இணைந்து பன்முகத்தன்மைக்கு ஏற்புடையவர்களாக அவர்களது வாழ்க்கை முறையானது மாற்றத்திற்குள்ளாகி வந்தாலும் அவர்களிற்கென்று சில தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.


 

பாரம்பரிய தொழில்முறையாக வேட்டையாடுதல், ஆமை பிடித்தல், ஆடு மாடு மேய்த்தல், தேன் எடுத்தல் என்பவற்றைக்குறிப்பிடலாம். தற்போது மீன்படி, விவசாயம் என்பவற்றிலும் அவர்களின் ஈடுபாடு ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமான 144 கெக்டயர் அளவு கொண்ட கரடியன்குளம் என்கின்ற குளத்தின் ஒருபகுதி இவர்களுக்கு மீன்பிடிப்பதற்காக மீன்பிடிச்சங்கமெர்று அண்மையில் உருவாக்கி அனுமதிவழங்கப்பட்டிருக்கின்றது. மீன்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேன் எடுப்பதற்குப் பொருத்தமானதாக அவர்கள் நினைக்கும் காலங்களில் காடுகளிற்குற் சென்று பத்து(10) நாட்கள் அல்லது அதைவிட அதிக நாட்கள் தங்கியிருந்து தேனைப் பெறுவதற்காகக் காத்திருந்து அவற்றைப் பெற்றபின்பே வீடு திரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான சில உணவுப் பண்டங்களுடன் காட்டிற்குச் செல்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் காட்டிற்குள் தங்கியிருக்கவேண்டிய நாட்கள் அதிகமானால் காட்டினில் கிடைக்கக்கக்கூடிய கிழங்கு மற்றும் பழவகைகளை உண்கிறார்கள். 


சிலர் தமது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தேன் சேகரிக்கச் செல்கிறார்கள். சிலர் வீடுகளில் பிள்ளைகளை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். வீடுகளிலிருக்கும் முதல் பிள்ளைகள் தமது இளைய சகோதரர்களையும் பராமரித்தபடி தமது ஓய்வு நேரங்களை மலைக் குன்றுகளிற்கு சென்று சிறுவர்கள் ஓடி,ஆடி,விளையாடி கிழங்குகளை அவித்து சாப்பிட்டு ஓய்வு நேரங்களைக் களித்து வருகிறார்கள். அவர்களின் வழிபாட்டு முறையைப் பார்க்கின்ற போது குசலானமலைக் குன்றில் வணங்கப்படுகின்ற முருகப்பெருமான், பிள்ளையார் மற்றும் வைரவர் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.


2012ஆம் ஆண்டு  நிறுவனத்தினால் இவர்களுடைய மண்வீடுகள் கல்வீடுகளாக மாற்றிக்கொடுக்கப்பட்டது. அவர்களுடைய மண்வீடுகளானது மரத்தண்டுகள் மற்றும் களியைக் கொண்டு அமைக்கப்பட்டிக்கின்றது. அவர்களுக்குக் கல்வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் விடுபட்ட மற்றும் திருமணமுறைகள் மூலம் உருவாக்கப்பட்ட சில புதிய குடும்பங்கள் காரணமாக சிலர் இன்னும் மண்வீடுகளில் வாழ்வதைக்காணக்கூடியதாக உள்ளது. பொதுவாக இளவயதுத் திருமணம்(15,16 வயது) பாடசாலை இடைவிலகல் போன்றன இவர்களிடையே இயல்பான நடைமுறையாகக் காணப்படுகின்றது.



வேடுவர் பரம்பரையைச் சேர்ந்த கரடியன்குளம் பிரதேச மக்களின் பொருளதாரம், வாழ்க்கைத்தரம் என்பன தற்போது படிப்படியாக உயர்வடைந்து வருகின்றதென்றால் அதற்குக்காரணம் பன்முகத்தன்மையே. ஏனைய சமூகக் குழுக்களோடு இவர்களின் ஊடாட்டம் ஏற்பட்டுப் படிப்படியாக அதிகரிப்பதே அதற்குக் காரணமாகும். முன்னைய வருடங்களோடு ஒப்பிடுகின்றபோது மாணவர்களின் கல்வி மற்றும் மக்களின் தொழில்முறைமை என்பன தற்போது உயர்வடைந்து வருவது சிறப்பான அம்சமாகும். பன்முகத்தன்மையினால் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளங்கள் மறைக்கப்படுவதனூடாகத்தான் அச்சமூகத்தின் வாழ்க்கைத்தரமானது உயர்த்தப்படும் என்ற கூற்றைப் பொய்யாக்கி, கரடியன்குளம் மக்கள் இன்றும் அவர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணி தமது வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.






No comments