(பதுர்தீன் சியானா)
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கல் பகுதியில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் வாள் போன்றவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று (25) ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிண்ணியா-சூரங்கல் பகுதியில் நேற்று 24ஆம் திகதி கந்தளாய்-சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட நிலையில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபரின் வீட்டை சோதனையிட்ட போது அவர் தூங்கும் அறைக்குள் வாள் ஒன்று மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த நபரிடமிருந்து புலன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடப்பட்டதையடுத்து 48 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்குமாறும் 27ஆம் திகதி குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்கபடுபவர் கிண்ணியா-ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் ஷரூக் (34வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments