(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்கள் 127 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை மாத்திரம் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது “நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர்.இவர் கொழும்பு-அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதியாக கடமையாற்றுபவர்.
குறித்த சாரதியுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவருக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஏற்கெனவே சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர் எனவும் மாகாண பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.
அதேபோன்று ஆரையம்பதி சுகாதார பிரிவின் ஒல்லிக்குளம் பகுதியில் 37வயதுடைய பெண்னொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரும் கொழுப்புக்கு சென்று வந்தவர்.இவருடன் நேரடியாக தொடர்புகொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments