(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் இது வரை எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அனுராத ஜயதிலக தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முகநூல் ஊடாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பில் இன்று (24) கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா என சந்தேகத்தின் பேரில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு நோயாளர்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது எவருக்கும் கொரோனா தொற்று இருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் 70 வயதுடைய பெண்ணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த போது அவருடைய மாதிரிகள் மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டிருந்ததாகவும் இதனையடுத்து கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அனுராத ஜயதிலக குறிப்பிட்டார்.
இதேவேளை தொடர்ச்சியாக சந்தேகமான நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்ல பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்படுமாறும் சுகாதாரத் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments